Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம் வாக்குகள் திருடப்படுவதாக 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 6-ஆம் தேதி முதல் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணி, ஜந்தர் மந்தரில் தர்ணா, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமைதிப் போராட்டம் என எதிர்க்கட்சிகள் பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்தப் போராட்டங்களில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளுடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்று வருகின்றன.
இதற்கிடையில், டெல்லியின் முக்கியப் போராட்டக் களங்களில் ஒன்றான ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில், ஜந்தர் மந்தரை அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களங்களின் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.
போராட்டம் நடத்துவதற்கான இடத்தைத் தடை செய்தால் மக்களின் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவரலாம் என அரசு நினைப்பதாகவும், ஆனால் அது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டாலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் உருவெடுக்கும் என்றும், ஒட்டுமொத்த நாடும் போராட்டக் களமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் நடத்தும் இடம் அரசின் உண்மையான பிரச்சினை அல்ல என்றும், மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே இத்தகைய தடைக்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்ந்தால், நாட்டின் ஜனநாயகத்திற்கே தடை விதிக்க அரசு துணியலாம் என்றும் அபிஜீத் திப்கே தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டத் தடை விவகாரம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைச் சுற்றியுள்ள அரசியல் மோதலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V