Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் மாதம் 30 நாட்களும் வேலை செய்தாலும், தங்களுக்கு ரூ.13,900 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
விலைவாசி உயர்வு மற்றும் குடும்பச் செலவுகளுக்கு மத்தியில் இந்த ஊதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்துவது சிரமமாக இருப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளாகப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போனஸ் வழங்குவதுடன் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடர்வது குறித்து ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில ஊழியர்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பாகப் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வருவதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட தங்களுக்கு உரிய நன்மைகள் கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
மேலும், “நாங்கள் விஜய் அண்ணா மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்றும் அவர்கள் கூறினர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் 2-வது நாளாகத் தொடரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பார்களா என்ற எதிர்பார்ப்பும் ஊழியர்களிடயே எழுந்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V