Enter your Email Address to subscribe to our newsletters

கோலாப்பூர், 13 அக்டோபர் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் கர்கோட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரன்னும் (23). அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபாத் வதார் (25) என்பவரும் தரன்னும் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தரன்னுமுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் தனது காதலன் ஸ்ரீபாத் வதாருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபாத் வதார், தரன்னுமைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 9-ஆம் தேதி பிற்பகல், திருமணத்துக்கு முன்பு இதுவே தங்களின் கடைசி சந்திப்பு என்று கூறி, தரன்னுமை பூதர்காட் பகுதியில் உள்ள நாயக்வாடி நீர்வீழ்ச்சிக்கு ஸ்ரீபாத் வதார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு சென்றதும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தரன்னுமிடம் அவர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு தரன்னும் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீபாத் வதார், நீர்வீழ்ச்சி அருகே உள்ள மலையிலிருந்து ஆழமான பள்ளத்தாக்கில் தரன்னுமைத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு வீடு திரும்பிய ஸ்ரீபாத் வதார், தரன்னுமுக்கு தாகம் ஏற்பட்டதால் தண்ணீர் எடுப்பதற்காகத் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றதாகவும், திரும்பி வந்தபோது அவர் காணாமல் போய்விட்டதாகவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தரன்னுமின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பூதர்காட் போலீசார், அவர் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது ஸ்ரீபாத் வதார் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தரன்னுமைப் பள்ளத்தாக்கில் தள்ளிக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர் அடையாளம் காட்டிய இடத்தில் மீட்புக் குழுவினரின் உதவியுடன் தரன்னுமின் உடல் மீட்கப்பட்டது.
தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்ரீபாத் வதாரைக் கைது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இளம்பெண் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், கோலாப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V