Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு, கல்வி, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்குத் தகுதியுள்ள தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ற விவரங்களையும் அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தனிநபராக விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பொருத்தமான ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் பணிகள் 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவையாக இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் விண்ணப்பிப்பவர்கள் தங்களது களப்பணிகள், திட்ட அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள், வெளியீடுகள் மற்றும் அந்தப் பணிகளால் ஏற்பட்ட பயன்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தரமான ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் இதற்குத் தகுதியுடையவை.
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கு அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் இணைக்க வேண்டும். கட்டுரை வெளியான ஆய்விதழ் அல்லது அறிவியல் இதழின் விவரங்களையும் அளிக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளது.
விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான http://awards.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல், மின்னஞ்சல் அல்லது நேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையை 044-24336421 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். துறையின் இணையதளம்: http://environment.tn.gov.in. மின்னஞ்சல்: tndoe@nic.in. அனுப்பும் படி அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V