ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் யுபிஐ (UPI) சேவை தொடர்பாக வெளியான கட்டண அறிவிப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தன
UPI pf


புதுடெல்லி, 13 அக்டோபர் (ஹி.ச.)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் யுபிஐ (UPI) சேவை தொடர்பாக வெளியான கட்டண அறிவிப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதன் அமலாக்கம் தீபாவளிக்குப் பிறகு தள்ளிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தற்போது தேநீர்க் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறை அதிகரித்துள்ளது.

பணத்தை நேரடியாகக் கையாள வேண்டிய அவசியம் இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இந்தச் சேவை வசதியாக உள்ளது.

குறிப்பாக, சில்லறைப் பணம் இல்லாத சூழலிலும் கைப்பேசி வாயிலாக உடனடியாகப் பணம் செலுத்த முடிவதால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் கடைகளுக்கு இத்தகைய கட்டணங்கள் கூடுதல் செலவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்தது.

ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்குப் பிறகு இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், புதிய கட்டண நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு வணிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கட்டணம் எந்த வகையான பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும், அதை யார் செலுத்த வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா போன்ற கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.

யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என்று இதைப் பொருள் கொள்ளக் கூடாது.

கட்டண விதிமுறைகள் பரிவர்த்தனையின் வகை மற்றும் தொடர்புடைய அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பொறுத்து மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V