Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை புழல், தாளமுத்து தெருவில் வசித்து வரும் அபுதாகிர் (24), வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவர் நேற்று வேலை முடித்துவிட்டு கேம்ப்–புழல் சந்திப்புச் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த திருநங்கை ஒருவர் அபுதாகிரைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு ஆசீர்வாதம் செய்வதாகக் கூறியுள்ளார்.
இதற்குச் சம்மதித்த அபுதாகிருக்கு ஆசீர்வாதம் செய்த பின்னர், அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2,400 பணத்தை எடுத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அபுதாகிர், சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற புழல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் திருநங்கையைத் தேடி வந்தனர்.
அதனை தொடர்ந்து இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று கதிர்வேடு சந்திப்பு அருகே நின்றிருந்த திருநங்கையைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் வியாசர்பாடி, சாஸ்திரி நகர் முதல் தெருவைச் சேர்ந்த கனிஷ்கா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து புகாரில் குறிப்பிடப்பட்ட ரூ.2,400 பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கனிஷ்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V