Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 14 அக்டோபர் (ஹி.ச.)
புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் அரசியல் விமர்சனங்கள் அடங்கிய வாசகங்கள் காட்டப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், எங்க உங்க அப்பாவையே காணோம், ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி, கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்ட ஸ்டாலின் அங்கிள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
திமுகவினரையும் அக்கட்சியின் தலைவர்களையும் விமர்சிக்கும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்திருந்ததாகத் தெரிகிறது.
அந்தப் பேருந்தைப் பின்தொடர்ந்து சென்ற வாகன ஓட்டிகள், டிஜிட்டல் பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த வாசகங்களைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் அந்தக் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் அரசு பேருந்தின் பெயர் பலகையில் அரசியல் சார்ந்த வாசகங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் வழக்கமாக வழித்தடம் மற்றும் சேருமிடம் தொடர்பான தகவல்கள் இடம்பெறும்.
இந்நிலையில், அரசியல் விமர்சனங்கள் அடங்கிய வாசகங்கள் அதில் எவ்வாறு இடம்பெற்றன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த வாசகங்கள் எப்போது, யாரால் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பதும், சம்பவத்தின் பின்னணி என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
Hindusthan Samachar / LOGESHWARI V