Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 அக்டோபர் (ஹி.ச.)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி மற்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தியன்று ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இதில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சினரும் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்தச் சூழலில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களிடம் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களுடன் வந்த 10-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடிகளை ஏந்தியபடி, பூட்டப்பட்டிருந்த நுழைவாயில் மீது ஏறி மறுபுறம் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இரு செய்தித் தொடர்பாளர்கள் உட்பட அங்கிருந்தவர்களை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற போலீசாரின் கணிப்பின் அடிப்படையில் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதாக வழக்கறிஞர் அபிஷ்த் ஹேலா தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் திரண்டு வர வேண்டும் என இருவரும் அழைப்பு விடுத்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் தவறானது என்று அவர் குற்றம்சாட்டினார். அவர்கள் யாரையும் அவ்வாறு அழைக்கவில்லை என்றும், ஒப்பந்த நிபந்தனைகளை மீறவில்லை என்றும் அவர் கூறினார்.
வேறொரு பகுதி தொடர்பான புகார் இந்த வழக்கில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது
Hindusthan Samachar / LOGESHWARI V