Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 14 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் முனியப்பனூர் அருகே வசித்து வரும் அறிவுக்கண்ணு (50), விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 23 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஆடுகளைச் சூழ்ந்து கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த 23 ஆடுகளும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
ஒரே நேரத்தில் 23 ஆடுகளையும் இழந்ததால், அறிவுக்கண்ணு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் நம்பி வாழ்ந்து வரும் அவருக்கு இந்தச் சம்பவம் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
முனியப்பனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், தோட்டங்களில் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் அவற்றைப் பாதுகாப்பதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் கால்நடைத் துறையினர் இணைந்து உரிய ஆய்வு மேற்கொண்டு, சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆடுகளை இழந்து தவிக்கும் அறிவுக்கண்ணுவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் கருத்தில் கொண்டு, உரிய விசாரணை நடத்தி அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V