Enter your Email Address to subscribe to our newsletters

குலசேகரன்பட்டினம் 14 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
திருவிழாவின்போது சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கொடிகள், டி-ஷர்ட்கள், தொப்பிகள், பேனர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவரக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (23), துரை (20), முத்துப்பாண்டி (33), வானுமாமலை (47), இருள்ராஜ் (40) ஆகிய ஐந்து பேர் நேற்று குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் அருகே சாதிக்கொடியுடன் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்தபடி அவர்கள் கோவிலை நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.அங்கு சென்ற போலீசார், ஐந்து பேரிடமிருந்த சாதிக்கொடியைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிழாவின்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் குழுக்கள் சாதி அடையாளங்களைக் கொண்ட டிஜிட்டல் பேனர்கள், பேட்ஜ்கள், கொடிகள், டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது என போலீசார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையை மீறிச் செயல்படும் தசரா குழுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V