Enter your Email Address to subscribe to our newsletters

லக்கிம்பூர், 14 அக்டோபர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள போஜியா கிராமத்தைச் சேர்ந்தவர் சானியா. 7 வயதான இவர், மாலை நேரத்தில் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த சிறுத்தை, சிறுமியைத் தாக்கி அருகிலிருந்த வயலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இதைக் கண்ட சிறுமியின் தந்தை மற்றும் கிராம மக்கள், சிறுத்தையை விரட்டிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று காலையில் அருகிலிருந்த கரும்பு வயலில் சிறுமி சானியா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் பரைச் மாவட்டத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள பதையா கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் என்ற 7 வயது சிறுவன், தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்குச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது வயலில் மறைந்திருந்த சிறுத்தை, சிறுவன் மீது பாய்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் சிறுவனைச் சிறுத்தை வயலுக்குள் இழுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
ஒரே மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிறுத்தை தாக்குதலால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
கிராமப்புறங்களில் வீடுகளுக்கு அருகிலுள்ள வயல்களில் சிறுத்தைகள் நடமாடுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V