பெங்களூரு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் தீ விபத்து - 2 பெட்டிகள் எரிந்து சேதம்!
பெங்களூர், 15 அக்டோபர் (ஹி.ச.) கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா அருகே உள்ள ராஜானுகுண்டே பகுதியில், ரயில்வே தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் இன்று திடீரெனத் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. கடந்த இரண்டு ம
Train fire accident


பெங்களூர், 15 அக்டோபர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா அருகே உள்ள ராஜானுகுண்டே பகுதியில், ரயில்வே தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் இன்று திடீரெனத் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில், ரயில் பெட்டிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முதலில் ஒரு ரயில் பெட்டியில் தீப்பற்றியுள்ளது. காற்றின் வேகம் மற்றும் தீயின் தீவிரம் காரணமாக, சிறிது நேரத்திலேயே தீ அருகில் இருந்த மற்றொரு பெட்டிக்கும் பரவியது. இதனால் இரண்டு பெட்டிகளிலும் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

ரயில் பெட்டிகளில் தீப்பற்றி எரிவதைக் கண்டவர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.தீ வேகமாகப் பரவியதால், அதனை அணைக்கப் பணியாளர்கள் நீண்ட நேரம் போராட வேண்டியிருந்தது.

தீயைக் கட்டுப்படுத்தியபோதிலும், அதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் இரண்டு ரயில் பெட்டிகளும் முற்றிலும் எரிந்து பலத்த சேதமடைந்தன. தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவம் நடைபெற்றபோது ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லை என்றும், அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.இதற்கிடையே, இந்தத் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

மின்கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீப்பற்றியதா, அல்லது யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜானுகுண்டே காவல் நிலையப் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Hindusthan Samachar / LOGESHWARI V