இஸ்லாத்துக்கு மாறியவர்கள் BC இடஒதுக்கீடு கோர முடியாது -உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த என். பரமசிவம் என்பவர், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். பின்னர் தனது பெயரை என். சமீர் அகமது என மாற்றிக்கொண்டார். இதையடுத்து, தனக்கு ‘முஸ்லிம்
Issue


புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த என். பரமசிவம் என்பவர், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். பின்னர் தனது பெயரை என். சமீர் அகமது என மாற்றிக்கொண்டார்.

இதையடுத்து, தனக்கு ‘முஸ்லிம் லெப்பை’ சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவரது விண்ணப்பத்தை கயத்தாறு வட்டாட்சியர் நிராகரித்தார்.

இதனை எதிர்த்து சமீர் அகமது சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே, பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறும் வகையில் தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையின் சட்டப்பூர்வத் தன்மையை ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, 2026 ஜூன் மாதத்தில் அதனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி ரத்து செய்தது.

மேலும், மதமாற்றம் செய்ததன் அடிப்படையில் மட்டும் ஒருவர் குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது எனத் தெரிவித்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

மதம் மாறியதன் காரணத்தால் மட்டும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒருவராகத் தானாகவே அங்கீகாரம் பெற முடியாது என்பதே தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.

Hindusthan Samachar / LOGESHWARI V