Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் சில மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை புரசைவாக்கம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரசைவாக்கம் அருகே நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பேருந்தின் இருக்கைகளில் அமராமல் பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சிலர் பேருந்தின் கூரை மீது ஏறியும், ஜன்னல் கம்பிகளில் கால்களை வைத்தும், படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்ததாகத் தெரிகிறது.
மாணவர்களின் ஆபத்தான பயணத்தைக் கவனித்த நடத்துநர், அவர்களைக் கண்டித்து எச்சரித்துள்ளார்.
இருப்பினும், மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பேருந்து புரசைவாக்கம் மேம்பாலத்தின் மீது சென்றபோதும் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாகத் தெரிகிறது.
இதனால் அச்சமடைந்த ஓட்டுநர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் நோக்கில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது ஓட்டுநருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது
பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பொதுமக்கள் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் அவதியடைந்தனர். மேலும், அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் கூரை மீது ஏறுவது, ஜன்னல் கம்பிகளில் கால்களை வைப்பது, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது போன்ற செயல்கள் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எதிர்பாராத விதமாக நிலைதடுமாறினாலோ அல்லது வாகனம் திடீரென பிரேக் போட்டாலோ கடுமையான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பேருந்துகளில் பயணிக்கும்போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பதும் அவசியம் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்
Hindusthan Samachar / LOGESHWARI V