தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தில் மஞ்சள் விலை- ஒரு குவிண்டால் ரூ.23,000-க்கு விற்பனை
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,000-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ர
Turmeric


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,000-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.23,000 வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.20,000 வரை விற்பனையானதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய விலை அதையும் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மஞ்சளுக்கான தேவை, சந்தைக்கு வரும் விளைபொருளின் அளவு உள்ளிட்ட காரணிகள் விலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மஞ்சள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மகாராஷ்டிராவில் போதிய மழை பெய்யாததால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவு குறையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

உற்பத்தி குறைந்தால் சந்தையில் மஞ்சளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வணிகத் தரப்பினர் கருதுகின்றனர். இருப்பினும், அடுத்த ஆண்டு மஞ்சள் உற்பத்தி மற்றும் விலை எவ்வாறு இருக்கும் என்பது சாகுபடி நிலவரம், சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவு மற்றும் தேவை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

தமிழகத்திலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய் கிழமை அன்று ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்ந்ததை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உயர்த்தபட்டு இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் பயிர்களின் வளர்ச்சியையும் விளைச்சலையும் பாதிக்கக்கூடும்.

தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் சாகுபடி பாதிப்பு தொடர்ந்தால், வரும் காலங்களில் மஞ்சள் வரத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதனால் சந்தை விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V