திருப்பதியில் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா!
திருப்பதி, 15 அக்டோபர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலை, கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். த
Thirupathi


திருப்பதி, 15 அக்டோபர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலை, கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேவலோகத்தில் பக்தர்கள் வேண்டிய வரங்களை வழங்கும் மரமாகக் கல்ப விருட்சம் போற்றப்படுகிறது.

அதேபோல், கலியுகத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வமாக ஏழுமலையான் விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இதனை உணர்த்தும் வகையில், பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் காலை வாகனச் சேவை நடைபெற்றது.

இந்த வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

மேலும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணி, சத்யபாமா சமேதராகக் காட்சியளிக்கும் அலங்காரத்துடன் நடைபெற்ற இந்த வாகனச் சேவை பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

திருப்பதி கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் மலையப்ப சுவாமி வலம் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வாகனச் சேவையைக் கண்டு மகிழ்ந்தனர்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த வாகன ஊர்வலத்தின்போது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிகள் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடையே பக்தி உணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கல்ப விருட்ச வாகனச் சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V