Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 16 அக்டோபர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் புங்கனூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி. மிதுன் ரெட்டியின் கார் அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, அக்கட்சித் தலைவர் ஜெகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஆந்திராவில் தற்போது காட்டு ராஜ்ஜியம் நடந்து வருகிறது என்றும், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வன்முறையை ஊக்குவித்து ஆட்சி நடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மக்கள் மத்தியில் ஆளும் கூட்டணிக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதால், உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் தடுத்து நிறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
தோல்வி பயத்தின் காரணமாகவே ஆளும் கூட்டணியினர் தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் கூறிய ஜெகன், தனது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த ஆளும் தரப்புக்கு விருப்பமில்லை என்றும், மத்திய பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் தேர்தலை நடத்தினால்தான் நியாயமான தேர்தலை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, புங்கனூரில் மிதுன் ரெட்டியின் கார் அணிவகுப்பை தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து நிறுத்தி, கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்தச் சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன், மிதுன் ரெட்டியின் பாதுகாப்புப் பணியாளர்களும் காயமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடைபெற்றபோது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் மிதுன் ரெட்டியை வேட்புமனு தாக்கல் மையத்தில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மிதுன் ரெட்டியிடம் தொலைபேசியில் பேசிய ஜெகன், அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA