ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்- நாரா புவனேஷ்வரி
விஜயவாடா , 16 அக்டோபர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் என்.டி.ஆர். நினைவு அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன ரத்த வங்கி மற்றும் தலசீமியா சிகிச்சை மையத்தை நாரா புவனேஸ்வரி திறந்து வைத்தார். இந்த மையங்கள் விஜயவாடா மக்களின் பயன்பாட்டு
A


விஜயவாடா , 16 அக்டோபர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் என்.டி.ஆர். நினைவு அறக்கட்டளை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன ரத்த வங்கி மற்றும் தலசீமியா சிகிச்சை மையத்தை நாரா புவனேஸ்வரி திறந்து வைத்தார்.

இந்த மையங்கள் விஜயவாடா மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதையொட்டி அவர் பேசுகையில்,

அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் நோயாளிகளின் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையை உணர்ந்து, ஏழை நோயாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் அறக்கட்டளையின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும், அதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மறைந்த என்.டி.ஆர். மக்களுக்காகப் பணியாற்றுவதையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

சமூகத்தின் கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் சிறந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்ற அவரது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த அறக்கட்டளையை நிறுவியதாக புவனேஸ்வரி தெரிவித்தார்.

கடந்த 29 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறக்கட்டளை சேவையாற்றி வருகிறது. சஞ்சீவனி நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் என்.டி.ஆர். ஆரோக்கிய ரதங்கள் மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் தொலைதூர மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் இலவச மருத்துவச் சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், என்.டி.ஆர். சுஜலா திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி ரத்தம் தேவைப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கத்தில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக புவனேஸ்வரி தெரிவித்தார்.

ஐதராபாத்தில் ஏற்கெனவே தலசீமியா குழந்தைகளுக்கு இலவசமாக ரத்தம், மருந்துகள் மற்றும் ரத்த வடிகட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விஜயவாடாவிலும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

குண்டூர், விசாகப்பட்டினம், திருப்பதி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் ஏற்கெனவே ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த ஒரு மாதத்துக்குள் அனந்தபூரிலும் புதிய ரத்த வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதுடன், அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் அறக்கட்டளை உதவி செய்து வருகிறது. பெண்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய ஸ்திரீசக்தி கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் மூலம் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருவதுடன், வெள்ளம், புயல், கொரோனா பெருந்தொற்று போன்ற பேரிடர் காலங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறக்கட்டளை துணை நின்றதாக புவனேஸ்வரி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் என்.டி.ஆர். அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேந்திரா, தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்களையும், சேவையாற்றியவர்களையும் நாரா புவனேஸ்வரி கவுரவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA