பாகிஸ்தானுக்கு கடற்படை ரகசியங்களைப் பகிர்ந்ததாகப் புகார் - மேலும் இருவர் கைது
விசாகப்பட்டினம், 16 அக்டோபர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் பணியாற்றி வந்த பொங்கு ரவி மற்றும் கடாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோரை, ஆந்திரப் போலீசாரின் கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவு கைது செய்துள்ளது. கடற்படை தொடர்பான முக்க
Arrested


விசாகப்பட்டினம், 16 அக்டோபர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் பணியாற்றி வந்த பொங்கு ரவி மற்றும் கடாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோரை, ஆந்திரப் போலீசாரின் கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவு கைது செய்துள்ளது.

கடற்படை தொடர்பான முக்கியத் தகவல்களை வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் பகிர்ந்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி ரகசியத் தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, 'ஏஞ்சல் பயல்' என்ற பெயரில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி சமூக வலைதளக் கணக்கு மூலம், இருவருக்கும் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பணத்திற்காகப் பகிர்ந்ததாக இருவர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பரிமாற்றத்தின் பின்னணியில் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வழக்கில், கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜியை ஆந்திரப் போலீசார் அண்மையில் கோவையில் வைத்து கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 18 பேரில் 13 பேர் கடற்படைப் பணியாளர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு மற்றும் முக்கிய ராணுவத் தகவல்களின் ரகசியத்தன்மை தொடர்பாக இந்த வழக்கு கவனம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், சமூக வலைதளத் தொடர்புகள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V