Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 அக்டோபர் (ஹி.ச.)
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக, அதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியின் முக்கியப் போராட்டத் தளமான ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற சூழலில், ஜந்தர் மந்தர் பகுதி போராட்டத்துக்கான அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, கட்சி நிர்வாகிகளான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஜந்தர் மந்தர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, ஏற்கெனவே அளித்திருந்த உத்தரவாதத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி, இருவருக்கும் ஐந்து நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதாகவும், அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பண்டிகைக் காலத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றால் தங்களது வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரிய அவரது மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்தது.
எனினும், போராட்டம் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் சட்டவிரோதமான சூழல் உருவானால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V