தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் – அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு
பெரம்பலூர், 16 அக்டோபர் (ஹி.ச.) பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16,350 பயனாளிகளுக்கு ரூ.6.89 கோடி மதி
Minister Vijayalakshmi


பெரம்பலூர், 16 அக்டோபர் (ஹி.ச.)

பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16,350 பயனாளிகளுக்கு ரூ.6.89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இடையே நிலவும் பால் கொள்முதல் விலை வேறுபாட்டைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிறுவயலூர், நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், பால் குளிரூட்டும் மையம் மற்றும் பாடாலூர், திருவளக்குறிச்சியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணை, பால் பவுடர் தயாரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பால் பவுடர் தயாரிப்பு நிலையப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.

அப்போது, 43 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 16,350 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை, ஆவின் சிறு பால்பண்ணை கடன், தவணைக் கடன், தாட்கோ கடன் மற்றும் கறவை மாடு பராமரிப்புக் கடன் உள்ளிட்ட மொத்தம் ரூ.6 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 288 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் விஜயலட்சுமி, ஆய்வின்போது பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தனியார் பால் நிறுவனங்களுக்கும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் இடையே பால் கொள்முதல் விலையில் வேறுபாடு இருப்பதாக உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம், எல் நினோ பாதிப்பால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு சார்பில் கால்நடைத் தீவன மானியம் வழங்கப்படுவதாகவும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு இதுவரை அந்த மானியம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், பெரும்பாலான மாவட்டங்களில் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பாலின் தரத்தைப் பரிசோதிக்காமல் தோராயமாக விலை நிர்ணயிக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு, சில இடங்களில் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, கால்நடை விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான கடன் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்காமல், கேள்விக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜயலட்சுமி, கைகளைக் கூப்பியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V