Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்குப் புகார் வந்தது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காசிமேடு பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தியாகு (32) என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 50-வது வட்ட இணைச் செயலாளராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின்படி, தியாகு சிறுமியின் தாயுடன் சுமார் 14 ஆண்டுகளாக குடும்ப நண்பரைப் போலப் பழகி வந்துள்ளார். மேலும், சிறுமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தாயிடம் கூறியதாகவும், சிறுமி திருமண வயதை அடைந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாகத் தாய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிறுமிக்கும் தியாகுவுக்கும் இடையே காதல் உறவு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சிறுமியைப் புகைப்படப் படப்பிடிப்புக்காக கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தியாகு புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கு அறை எடுத்துத் தங்கியிருந்தபோது, சிறுமியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராயபுரம் மகளிர் போலீசார் கடந்த 29-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்தின் அடிப்படையில் வழக்கு புதுச்சேரி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
அதில் குற்றம் நடைபெற்ற காவல் நிலைய எல்லைக்குள் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு பெறப்படும் புகாரின் அடிப்படையில் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தியாகு தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V