Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.
மேலும், விழா நாட்களில் தினமும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு இரவு கோவிலைப் பூட்டிவிட்டு கோவில் நிர்வாகத்தினர் சென்றுள்ளனர்.
இன்று காலை
வழக்கம்போல் கோவிலுக்குச் சென்ற பூசாரி, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.
நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து, பூட்டை உடைத்து நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் போலீசார், கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், திருட்டுச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கோவிலில் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார், அவர்கள் எந்த வழியாக உள்ளே நுழைந்தனர், திருடப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V