குஜராத் ரசாயன ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி
அகமதாபாத், 17 அக்டோபர் (ஹி.ச.) குஜராத் மாநிலம், வாக்ரா தாலுகாவில் உள்ள சாய்கா ஜிஐடிசி தொழிற்பேட்டையில் மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில்
Gujarat


அகமதாபாத், 17 அக்டோபர் (ஹி.ச.)

குஜராத் மாநிலம், வாக்ரா தாலுகாவில் உள்ள சாய்கா ஜிஐடிசி தொழிற்பேட்டையில் மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ரசாயன உற்பத்தியின் ஒரு பகுதியாக நடைபெறும் ஹைட்ரஜனேற்றச் செயல்முறையின்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆலையில் இருந்த ரியாக்டர் வெடித்துச் சிதறியது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலத்த காயமடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வெடிவிபத்து ஏற்பட்டபோது மெத்திலீன் டைகுளோரைடு (MDC) எனக் குறிப்பிடப்படும் ரசாயனப் பொருள் கசிந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரசாயனக் கசிவு ஏற்பட்டதா, அதன் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DISH) அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விபத்து தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா, ரியாக்டர் வெடித்ததற்கான காரணம் என்ன, ரசாயனக் கசிவு ஏற்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V