Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் பெருகுவதற்கும், பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் தூய்மையைப் பராமரிப்பதுடன், நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்.,
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வளாகங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதையும் எலிகள் பெருகுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயன்படுத்தப்படாமல் கிடக்கும் டயர்கள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் பிற தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கினால், அவை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான இடங்களாக மாறக்கூடும்.
எனவே, இதுபோன்ற கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், சுற்றுப்புறங்களில் நீர் தேங்காத வகையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்குக் காய்ச்சல் அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.
மேலும், ஒரே அலுவலகம், கல்வி நிறுவனம் அல்லது விடுதியில் ஒரே நேரத்தில் பலருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டால், அதுகுறித்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழைக் காலத்தில் நோய்த் தொற்றுகள் பரவாமல் தடுக்கத் தனிநபர் சுகாதாரம் மட்டுமின்றி, பொது இடங்களின் தூய்மையையும் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
இதனால், அனைத்து அரசு நிறுவனங்களும் நோய்த் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V