பினராயி விஜயன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
திருவனந்தபுரம், 17 அக்டோபர் (ஹி.ச.) கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், வீணா விஜயனுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தகவல் தொழில்ந
Pinarai vijayan


திருவனந்தபுரம், 17 அக்டோபர் (ஹி.ச.)

கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், வீணா விஜயனுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தகவல் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளுக்கான கட்டணமாக இந்தப் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

இந்தப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து பினராயி விஜயன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளும் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

தன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என பினராயி விஜயன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.

அக்டோபர் 26-ஆம் தேதி நீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தையும் அவரது தரப்பு வழக்கறிஞர் முன்வைத்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அக்டோபர் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது கேரள அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனினும், பினராயி விஜயன் கைது செய்யப்படுவார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Hindusthan Samachar / LOGESHWARI V