ராஜஸ்தானில் கோர விபத்து கால்வாயில் மினிபஸ் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
ஜெய்பூர், 17 அக்டோபர் (ஹி.ச.) ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி–மும்பை விரைவுச்சாலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மினிபஸ்சில் மொத்தம் 23 பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்ப
Accident


ஜெய்பூர், 17 அக்டோபர் (ஹி.ச.)

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி–மும்பை விரைவுச்சாலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மினிபஸ்சில் மொத்தம் 23 பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் சாலையோரத்தில் இருந்த சுமார் 15 அடி ஆழமுள்ள கால்வாயில் கவிழ்ந்தது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. பேருந்துக்குள் தண்ணீரும் சகதியும் புகுந்திருந்ததால், பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, கிரேன் உள்ளிட்ட உபகரணங்களின் உதவியுடன் பேருந்தை மீட்டு, அதில் சிக்கியிருந்தவர்களை வெளியே கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 15 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில், மினிபஸ் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V