Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலைகளிலும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, வடசென்னையின் சில பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வேளச்சேரியில் தயார் நிலையில் உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காகப் படகுகள், உயிர்காக்கும் கவசங்கள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் தயாராக உள்ளனர். பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை
கடந்த காலங்களில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட தென்சென்னைப் பகுதிகளில் கனமழையின்போது வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மழைநீர் தேங்கும் அபாயமுள்ள பகுதிகளில் மீட்புக் குழுவினர் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, அக்டோபர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பாதிப்புகளைக் கண்காணித்து, அவசரத் தேவைகளுக்கேற்ப மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யும் சூழலில், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் இறங்குவதைத் தவிர்க்கவும், மின்கம்பிகள் மற்றும் திறந்தவெளி மின்சாதனங்கள் அருகே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam