Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்தும், ஐஐடி, ஐஐஎம், என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னணி மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற கனவுடன் பல எஸ்சி, எஸ்டி மாணவர்கள் காத்திருப்பது வேதனையளிக்கிறது. கல்வி உதவித்தொகை கிடைப்பதில் உள்ள கட்டுப்பாடுகளும், அந்த நிறுவனங்களில் நிலவும் கடினமான சூழல்களும் அவர்களுக்குப் பெரும் தடையாக உள்ளன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
எஸ்சி மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான தேசிய பெல்லோஷிப் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்களில் பயன்பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிகளிலிருந்தும் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு இந்த வரம்பு நிர்ணயிக்கப்படுவது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான கல்வி உதவித்தொகை விதிமுறைகளைப் போன்றதாக உள்ளது. இது பெரும் அநீதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு எஸ்சி அல்லது எஸ்டி குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் அல்லது ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டது என்பதற்காக, உயர்தரக் கல்விக்கான மிகப்பெரிய செலவுகளை அந்தக் குடும்பத்தால் ஏற்க முடியும் என்று எப்படிக் கருத முடியும் என வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெற்றோரின் வருமானம் மற்றும் விவசாய வருமானம் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் கணக்கில் கொண்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மறுக்கப்படுவது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களைச் சமூகத்தின் முன்னேற்றப் பாதையில் இணைப்பதே நோக்கமாக இருக்கும்போது, இத்தகைய வருமான வரம்புகள் அதற்கு முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை சீர்திருத்தம் அல்ல; பின்னோக்கி இழுக்கும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் வீரேந்திர குமார் ஆகியோர் இந்தப் பழைய வருமான வரம்புகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தனிநபர் நிகர தேசிய வருமானத்தின் அடிப்படையில், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழைய வருமான வரம்புகளால் தகுதியுள்ள மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN