Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, பொதுமக்கள் மழை ஓயும் வரை தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று அதிகாலை ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சிக் கட்டுப்பாட்டு அறை, எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களாக நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். மழைப் பாதிப்புகளைக் கண்காணிக்கக் கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
சென்னையில் எட்டு மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க ஆறு முகாம்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பழைய கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு வசிப்பவர்களை மழைக்காலம் முடியும் வரை பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam