தமிழ்த்தேசிய இனத்தின் வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன் – வீரப்பனாரைப் புகழ்ந்த சீமான்
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச) சந்தனக் கடத்தல் வீரப்பனாரைத் தமிழ்த்தேசிய இனத்தின் வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன் எனப் போற்றியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நதிநீர் உரிமை, வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் கர்
Seeman


Nn


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச)

சந்தனக் கடத்தல் வீரப்பனாரைத் தமிழ்த்தேசிய இனத்தின் வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன் எனப் போற்றியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நதிநீர் உரிமை, வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரம் உள்ளிட்ட விவகாரங்களில் வீரப்பனார் குரல் கொடுத்ததாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், வீரத்தையும் மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும் போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன் வீரப்பனார் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதமேந்தி காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதும் கண்ணியமும் ஒழுக்கமும் தவறாமல் வாழ்ந்தவர் என்றும், வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக அறச்சீற்றத்துடன் நீதிகேட்டவர் என்றும் வீரப்பனாரைப் புகழ்ந்துள்ளார்.

உயிரைவிட உரிமை உன்னதமானது என்ற கோட்பாட்டின்படி, காவிரி நதிநீர் உரிமைக்காகப் போர்க்குரல் எழுப்பியவர் என்றும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரத்தை எதிர்த்து நின்ற மானத்தமிழன் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் குரலெழுப்பியவர் என்றும், அரச வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் காட்டுக்குள் நின்ற மாவீரன் என்றும் வீரப்பனாரைக் குறிப்பிட்டுள்ள சீமான், தமிழர் நிலத்தையும் வனத்தையும் காத்து நின்ற எல்லைக்காவலன் வீரப்பனாரின் வீரப்புகழைப் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ