ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் - டாம் காம் நிறுவனம் மீது பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் ஹரீஷ் ராவ் புகார்
ஹைதராபாத் , 18 அக்டோபர் (ஹி.ச.) தெலங்கானாவில் ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்தும், இதுவரை ஒருவருக்குக்கூட வேலை வழங்கவில்லை என்று அரசு சார்ந்த டாம் காம் நிறுவனத்தின் மீது பி.ஆர்.எஸ். க
A


ஹைதராபாத் , 18 அக்டோபர் (ஹி.ச.)

தெலங்கானாவில் ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்தும், இதுவரை ஒருவருக்குக்கூட வேலை வழங்கவில்லை என்று அரசு சார்ந்த டாம் காம் நிறுவனத்தின் மீது பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

தெலங்கானாவின் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 70 முதல் 75 இளைஞர்களிடம் ஜெர்மனியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.4.10 லட்சம் வசூலிக்கப்பட்டதாகவும், தேர்வு, காப்பீடு, விசா உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து ஒவ்வொருவரும் சுமார் ரூ.4.5 லட்சம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை என்றும், ஜெர்மன் நிறுவனங்களில் நேர்காணல்கூட நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெர்மன் மொழித் தேர்வில் பி1 தேர்ச்சி பெற்ற இளைஞர்களிடம் தற்போது பி2 தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறி காலதாமதம் செய்வதாகவும், ஜெர்மனி செல்லத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்ட 9 பேரில் ஒருவர்கூட இதுவரை அங்கு செல்லவில்லை என்றும் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார். மேலும், ஒப்பந்தத்தில் பிரச்சினை ஏற்பட்டால் லக்னோ நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனம் மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலைக் கேட்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இளைஞர்களிடம் வசூலித்த பணத்தைத் திருப்பிக் கொடுப்பதுடன், அவர்கள் இழந்த 2 ஆண்டுகளுக்கான பாதிப்பு, கடன் வட்டி மற்றும் மன உளைச்சலுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஹரீஷ் ராவ் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், டாம் காம் மற்றும் ஃபேர்ஸ்ட்ரீட் இந்தியா நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து சி.ஐ.டி. அல்லது நீதித்துறை விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

டாம் காம் நிறுவனம் வசூலித்த கட்டணங்கள் மற்றும் அதன் மூலம் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களிடம் பணம் வசூலித்ததாக எழுந்துள்ள புகார்களுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும் வரை பி.ஆர்.எஸ். கட்சி துணை நிற்கும் என்றும் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA