Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளத்தின் மீது மழைநீர் தேங்கியது.
இதனால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் மெதுவாகவும், காலதாமதமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பேசின் பிரிட்ஜ் பாலம் அருகே இரண்டு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால், ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வழக்கமான நேரத்தில் தங்களது பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.
கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் மழைநீர் தேங்கியதால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.
சாலையில் தேங்கிய தண்ணீரைக் கடந்து செல்ல முடியாமல் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ரயில்வே தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைநீரை விரைந்து அகற்றி, ரயில் போக்குவரத்தைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கிய சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V