Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.)
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷீத்லா மாதா கோவில் அருகே பக்தர்கள் மீது நெல் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவில் அருகே ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்து மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்ததும் மிகுந்த வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V