பட்டாசு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிரடி சோதனை
ஓசூர், 18 அக்டோபர் (ஹு.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது. பாகலூர் சாலை, ஜுஜூவாடி மற்றும் ஓசூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள்
Inspection


ஓசூர், 18 அக்டோபர் (ஹு.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது.

பாகலூர் சாலை, ஜுஜூவாடி மற்றும் ஓசூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

பட்டாசு விற்பனையின்போது விபத்துகளைத் தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்தக் கடைகளில் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தமிழக எல்லைப் பகுதியான ஓசூர் ஜுஜூவாடியில் உள்ள பட்டாசு கடைகளில் சார் ஆட்சியர் அக்ரிதி சேத்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பட்டாசு கடைகளுக்கு உரிய உரிமங்கள் பெறப்பட்டுள்ளனவா, அரசு வகுத்துள்ள பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கடைகளில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் எளிதாகப் பட்டாசுகளை வாங்கிச் செல்லும் வகையில், கடைகளுக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் போதிய வழிகள் உள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், கடைகளுக்கு அருகில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

எதிர்பாராத விதமாக தீ விபத்து அல்லது வெடி விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செயல்படும் வகையில், பட்டாசு கடைகளில் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வுக் குழுவினர் சரிபார்த்தனர்.

இந்த ஆய்வின்போது, ஓசூர் வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரி ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று அறிவுறுத்தினர்.

Hindusthan Samachar / LOGESHWARI V