தாம்பரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றம்- போக்குவரத்து மீண்டும் சீரானது!
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.) தாம்பரம் பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதையில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்ததால், அந்த வழியாகச் சென்ற சில வாகனங்கள்
Tambaram


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)

தாம்பரம் பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் சுரங்கப்பாதையில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்ததால், அந்த வழியாகச் சென்ற சில வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக்கொண்டன.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் சிக்கிய வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன.

சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரங்கப்பாதை வழியாகப் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார்கள் மூலம் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பணிகளின் மூலம் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது.

மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுரங்கப்பாதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

இதனால் கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரம் இடையேயான போக்குவரத்து மீண்டும் சீரடைந்தது.

தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் சூழல் நிலவுவதால், வாகன ஓட்டிகள் சாலைகளில் கவனமாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V