Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் மழைநீர் தேங்குவதைக் குறைக்க திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும் என்றும், திருப்புகழ் குழுவின் நீண்டகாலப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால், சென்னையில் கனமழையால் தேங்கிய நீர் விரைவாக வடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.4,000 கோடி செலவிடப்பட்டது குறித்து தவெகவினர் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சென்னையில் 1,000 கிலோமீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதாகவும், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டதாகவும், 770 இடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 60 நீர்நிலைகளைப் புனரமைத்தல், தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கே.என். நேரு, கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகள், அடையாறு ஆறு, ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
திருப்புகழ் குழுவின் பரிந்துரைகளில் இடைக்காலப் பரிந்துரைகளைத் திமுக அரசு நிறைவேற்றியதாகவும், நீண்டகாலப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்குள் தேர்தல் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, திருப்புகழ் குழுவின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதுடன், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு உட்கட்டமைப்புப் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து முடிக்க வேண்டியது தற்போதைய தவெக அரசின் பொறுப்பு என முதலமைச்சர் விஜய்க்கு கே.என். நேரு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam