Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)
திருச்சி – திருப்பதி இடையேயான நேரடி பகல்நேர ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் 17261/17262 ரயில்களைத் திருச்சிராப்பள்ளி வரை நீட்டிப்பதற்கு கடந்த 08.05.2026 அன்று ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரயில் சேவையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தொடர்ந்து வலியுறுத்தி ஒப்புதல் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒப்புதல் அளிக்கப்பட்டு ஐந்து மாதங்களைக் கடந்தும் ரயில் சேவை தொடங்கும் தேதி மற்றும் இயக்க அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தெற்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே பொது மேலாளர்களுக்கும், அக்டோபர் 5ஆம் தேதி தென் கடற்கரை ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியதாகக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அலுவலகத்தைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டும், கடிதம் மூலமாகவும் ரயில் சேவையை விரைந்து தொடங்க வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ரயில் புறப்படும் தேதி, நேரங்கள் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் நீண்டகாலப் பயணத் தேவையைக் கருத்தில்கொண்டு, இந்த நேரடி பகல்நேர ரயில் சேவையை விரைந்து தொடங்க ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam