திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – பெ. சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் அறிக்கையைத் தாமதமின்றி வெளியிட்டு, அதன் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ம
பெ.சண்முகம்


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் அறிக்கையைத் தாமதமின்றி வெளியிட்டு, அதன் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும், அதைத் தொடர்ந்து வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து விவாதிப்பதும் தொடர் கதையாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அறிக்கைகள் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை இக்குழு சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவற்றில் பெருநிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பதால் அறிக்கை வெளியிடப்படாமல் தடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டு, நிபுணர்களின் உழைப்பு மற்றும் அறிவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிடுவதற்கு என்ன தடை இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, தற்போதைய தமிழ்நாடு அரசு திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளதாக பெ. சண்முகம்

தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam