Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 19 அக்டோபர் (ஹி.ச.)
தாராபுரம் தொகுதியின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன்படி, காவிரியை ஆதாரமாகக் கொண்டு ரூ.1,439 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தாராபுரம் தொகுதியில் சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வீடற்ற குடும்பங்களுக்குச் சொந்தமாக நிலம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பாசனக் கால்வாய்களில் உள்ள மண் திட்டுகளை அகற்றி தூர்வாரும் வகையில் 159 பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், தாராபுரம் தொகுதியில் 271 கிலோமீட்டர் நீளத்திலான வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சியில் ரூ.6 கோடி செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், பாசனம், வீட்டு மனை, சுகாதாரம் மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது தாராபுரம் தொகுதி மக்களுக்குப் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V