‘கருப்பர் நகரம்’ படத்திற்கு அக்டோபர் 27 வரை தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தை அக்டோபர் 27-ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்க
Madras high court


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தை அக்டோபர் 27-ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் அவரது அனுமதியின்றி படப்பிடிப்பு தொடரப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கோபி நயினார் தனது கதையில் இயக்கத் தொடங்கிய திரைப்படம் ‘கருப்பர் நகரம்’. நடிகர் ஜெய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கங்காதரன் திரைப்படத்தை ரமேஷ் என்பவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இயக்குநர் கோபி நயினாரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறாமலும், அவருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியைச் செலுத்தாமலும், ஏற்கெனவே அவர் படமாக்கிய காட்சிகளைப் பயன்படுத்தி வேறொரு நபரை வைத்து படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியதாகப் புகார் எழுந்தது.

இதனால், தனது அனுமதியின்றியும் சம்பள பாக்கியை வழங்காமலும் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கோபி நயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, தயாரிப்பாளர் ரமேஷ் தரப்பில் அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், அதுவரை ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார்.

இதன் காரணமாக, படத்தின் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / LOGESHWARI V