Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீபெரும்புதூர், 19 அக்டோபர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவன்தாங்கல் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் ஸ்ரீபெரும்புதூர் ஏரியை நம்பி நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடும் வறட்சியையும் பொருட்படுத்தாமல், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றுக்குப் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் நெற்பயிர்களை வளர்த்து வந்துள்ளனர்.
தற்போது பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அவை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அருகிலுள்ள பீமன்தாங்கல் மற்றும் பாஞ்சாலப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த சிலர் வளர்க்கும் கறவை மாடுகள் இரவு நேரங்களில் கட்டவிழ்த்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு சுற்றித் திரியும் மாடுகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்து சேதப்படுத்தி வந்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் ஏற்கெனவே பலமுறை புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்போது மாடுகளைப் பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் நேற்று இரவு முதல் 60-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் வயல்களுக்குள் புகுந்துள்ளன. அவை சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை மேய்ந்தும் மிதித்தும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பயிர்களைச் சேதப்படுத்தும் மாடுகளைப் பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, விவசாயிகள் ஒன்றிணைந்து வயல்களில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்தனர்.
இதில் 12 கறவை மாடுகள் பிடிக்கப்பட்டு, வாலாஜாபாத் அருகே உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, பயிர்ச் சேதத்தால் ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V