டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை- மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் திட்டவட்டம்
மும்பை, 19 அக்டோபர் (ஹி.ச.) நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும்
Mumbai


மும்பை, 19 அக்டோபர் (ஹி.ச.)

நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படுபவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் பட்னவிஸ் கூறுகையில், நடிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

இந்த விவகாரத்தை மும்பை போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், விசாரணையின்போது கிடைத்துள்ள தடயங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து கொண்டு, தொலைதூரத்தில் இருந்தபடி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நபர்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் மகாராஷ்டிராவிற்குள் இருந்து செயல்படவில்லை என்றும், மாநிலத்திற்கு வெளியே அல்லது வெளிநாடுகளில் இருந்துகூட அவர்கள் செயல்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நபர்களைக் கண்டறிய, அவர்கள் செயல்படுவதாகக் கருதப்படும் மாநிலங்களின் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றப்படும் என்றும், வெளிநாடுகளில் இருந்து செயல்படுபவர்கள் தொடர்பாக மத்திய அரசின் உதவி பெறப்படும் என்றும் பட்னவிஸ் தெரிவித்தார்.

மேலும், மறைந்திருந்து தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்கள் கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளின் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் குற்றப்பிரிவு போலீசார் மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் (22), ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரஹான் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அடங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மூவருக்கும் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல் சம்பவத்துடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து செயல்பட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V