ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!
திருமலை, 19 அக்டோபர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பல்வேறு வகையான தரிசன டிக
Tirupathi


திருமலை, 19 அக்டோபர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு விவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பல்வேறு வகையான தரிசன டிக்கெட்டுகள் குறிப்பிட்ட தேதிகளில் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதால், பக்தர்கள் அட்டவணையின்படி முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஒதுக்கீடுகள் படிப்படியாக ஆன்லைனில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19ம் தேதி இன்று காலை 10 மணிக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இதற்கான மின்னஞ்சல் குலுக்கல் பதிவுகள் அக்டோபர் 21-ஆம் தேதி காலை 10 மணி வரை நடைபெறும்.

தேர்வு செய்யப்படும் பக்தர்கள் அக்டோபர் 21 முதல் 23-ஆம் தேதி மதியம் 12 மணி வரை கட்டணத்தைச் செலுத்தலாம்.

அக்டோபர் 22: மாலை 3 மணிக்கு மெய்நிகர் சேவைகளுக்கான ஒதுக்கீடு நடைபெறும்.

அக்டோபர் 23: காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண தரிசனத்திற்கான டோக்கன்கள் வெளியிடப்படுகின்றன. காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

அக்டோபர் 24: காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

ஜனவரி மாதத்தில் ஏழுமலையானைத் தரிசிக்கத் திட்டமிடும் பக்தர்கள், தேவஸ்தானம் அறிவித்துள்ள தேதிகள் மற்றும் நேரங்களைக் கவனத்தில் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

போலியான இணையதளங்களைத் தவிர்த்து, தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in வழியாக மட்டுமே டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V