Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 அக்டோபர் (ஹி.ச)
தமிழக கோவில்களுக்கு அசாமில் இருந்து கொண்டுவரப்படும் 5 யானைகளின் பிறப்பு மற்றும் உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மிருதுளா என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவிடம் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி மனு அளிக்கப்பட்டதாகவும், அந்த மனுவை பரிசீலிக்க உரிய கால அவகாசம் வழங்காமல், மறுநாளே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முதல் நாளில் மனு அளித்துவிட்டு, மறுநாள் காலையிலேயே வழக்கு தாக்கல் செய்வது நீதித்துறை நடவடிக்கையை தபால் அலுவலக பணியாக தரம் தாழ்த்துவதாக தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
மேலும், மனுவை பரிசீலிக்க சம்பந்தப்பட்ட குழுவுக்கு உரிய அவகாசம் வழங்கப்படாத நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ