Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 அக்டோபர் (ஹி.ச.)
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக அலங்கியம் ஊராட்சியில் பொறுப்பேற்று, கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளுக்கு இடையே அலங்கியத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய ஆவணங்களைக் காணும் வாய்ப்பு எதிர்பாராத வகையில் கிடைத்ததாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவற்றில் ஒன்று 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டு என்றும், மற்றொன்று 1958-ஆம் ஆண்டில் அன்றைய திமுக துணைப் பொதுச் செயலாளர் என்.வி. நடராசன் அலங்கியத்தில் திமுக கொடியேற்றி உரையாற்றிய நிகழ்வு தொடர்பான துண்டுப் பிரசுரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொங்குச் சோழ மன்னனான வீரராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டைப் படித்தபோது, 800 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் ‘அலங்கியம்’ என்ற பெயரே அந்த ஊருக்கு நிலைத்திருப்பதை அறிந்து மகிழ்ந்ததாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கலியுக கன்னீஸ்வரர் அல்லது திண்டீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் சிவாலயத்தின் கருவறைக்கு முன்னர் தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள அந்தக் கல்வெட்டு, அலங்கியத்தைச் சேர்ந்த ராசேந்திர அதியமான் என்பவர் அவிநாசியில் உள்ள கோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய விவரத்தைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலங்கியம் முன்பு ‘உத்தம சோழ நல்லூர்’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் மன்னன், மக்கள், நிலத்தின் எல்லைகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் மறைந்ததுடன், ஊரின் பெயருடன் இணைந்திருந்த ‘உத்தம சோழ நல்லூர்’ என்ற பெயரும் மறைந்துவிட்டதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எனினும், ‘அலங்கியம்’ என்ற பெயர் மட்டும் இன்றளவும் நிலைத்து நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1958-ஆம் ஆண்டு அலங்கியத்தில் நடைபெற்ற திமுக கொடியேற்று விழாவில் பங்கேற்ற 92 வயதான அய்யனாரை சந்தித்து உரையாடியதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்ற பெருமையுடன், இன்றும் தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் உரையைக் கேட்க ஆர்வமாக இருப்பதாக அய்யனார் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இளமைக் காலம் முதல் திமுக இயக்கத்தில் தமக்குள்ள ஈடுபாடு குறித்து அய்யனார் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டதாகவும், 17 திமுக தொண்டர்களை மட்டுமே கொண்டு அலங்கியத்தின் காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்கொண்ட வரலாற்றையும் அவர் விளக்கியதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அலங்கியம் காலவெள்ளத்தில் மறையாமல் தனது வரலாற்றை இன்றளவும் தாங்கி நிற்பதைப் போல, அய்யனார் போன்ற முன்னோடிகளின் உழைப்பும் இயக்க வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள தங்கம் தென்னரசு, அந்தச் சந்திப்பு தமக்கு உவகையும், உற்சாகமும், உணர்ச்சியும் அளித்ததாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ