Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 அக்டோபர் (ஹி.ச.)
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்புகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா
(பி. என்.எஸ்.எஸ்) பிரிவு 163-ன் கீழ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போராட்டம் காரணமாக பொதுமக்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய டெல்லியின் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதை ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 11 நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
அவை ஜனபத், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ராஜீவ் சவுக், சேவா தீர்த், மண்டி ஹவுஸ், லோக் கல்யாண் மார்க், ஐஎன்ஏ, சாவ்ரி பஜார், ராமகிருஷ்ண ஆசிரம மார்க் மற்றும் நியூ டெல்லி ஆகிய நிலையங்களாகும்.
எனினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், நியூ டெல்லி மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் உள்ளிட்ட சில நிலையங்களில் பயணிகள் ஒரு மெட்ரோ வழித்தடத்திலிருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாறுவதற்கான இன்டர்சேஞ் வசதி தொடரும் என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V