Enter your Email Address to subscribe to our newsletters

குஜராத், 02 அக்டோபர் (ஹி.ச.)
ஃப்ளைதுபாயின் FZ1073 விமானம் செப்டம்பர் 30ஆம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்டது.
போயிங் 737 MAX 8 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது காக்பிட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவசரநிலை உருவானது.
இந்தச் சம்பவத்தில் கேப்டன் ஸ்மித் மச்ச்சார் கடுமையாக காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், நிலைமையை சமாளித்து காக்பிட் கதவைத் திறக்க அவர் உதவியதாகவும், இதன் மூலம் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் துணை விமானியை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
சம்பவத்தின்போது விமானம் திடீரென உயரம் இழந்ததாகவும், பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேப்டன் மச்ச்சாரின் துணிச்சலை பாராட்டிய குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், அவரது செயலால் குஜராத் மற்றும் இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
காயமடைந்துள்ள அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்ச்சாருக்கு (Smit Machchhar) ‘விஷிஷ்ட் குஜராத் கரிமா விருது’ வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இதனுடன் ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு கேப்டன் மச்ச்சாருக்கு சவுதி அரேபியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காக்பிட்டில் ஏற்பட்ட மோதலுக்கான முழுமையான காரணம் மற்றும் துணை விமானியின் செயலுக்குப் பின்னுள்ள நோக்கம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V