சாத்தான்குளம் நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் இந்தி- 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி, 02 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டது. இதில் அந்தப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய முக்கிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட
Saththankulam


தூத்துக்குடி, 02 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டது.

இதில் அந்தப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய முக்கிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகையில் இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கவனத்துக்கு சென்றது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு மாறாக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பலகையில் இந்தி இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த நிலையில், பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகளை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர்.

மேலும், இந்தி இடம்பெறுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் நெடுஞ்சாலைத்துறையின் உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய 2 பேரை தமிழக அரசு தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக அரசு அலுவலர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதனிடையே, சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இந்த விவகாரம் தொடர்பான விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V