Enter your Email Address to subscribe to our newsletters

தாராபுரம், 02 அக்டோபர் (ஹி.ச.)
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தாராபுரத்தில் மளிகைக் கடை ஒன்றில் பொதுமக்களிடம் கேட்டறிந்ததாகவும், இதனால் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர்,
மளிகைக் கடை ஒன்றில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களுடன் ஒப்பிடும்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அன்றாட சமையலுக்குத் தேவையான பொருட்களைக்கூட வாங்குவதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் சந்தித்து வரும் விலைவாசி உயர்வு பிரச்சினைக்கு உரிய கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் விளம்பரங்களுக்கும், காணொளிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக தமிழக அரசை அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் தனது பதிவில் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்த காலகட்டத்திலும், திமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மாநிலத்தின் பொருளாதார நிலை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அளவில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த மூன்று மாதங்களில் சரிவைச் சந்தித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநில அரசின் வழிகாட்டி அமைப்பான ‘Guidance Tamil Nadu’ தொடர்பாகவும் அவர் விமர்சனம் முன்வைத்துள்ளார். அந்த அமைப்பில் பணியாற்றிய அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகி வருவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம்-ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ‘வெற்றி’ என்ற அடையாளத்தை வழங்குவதிலேயே கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தாராபுரத்தில் பிரசாரத்தின்போது மளிகைக் கடையில் விலைவாசி நிலவரம் குறித்து கேட்டறிந்ததை முன்வைத்து, பொதுமக்களின் அன்றாட பொருளாதார சுமைக்கு தமிழக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே தனது கருத்து என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V